×

குழந்தை வரம் தரும் க்ஷேத்ர பாலகர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சக்கரத்தாழ்வார் சந்நதி முன்பு ஒரு பெரிய கல் நடப்பட்டுள்ளது. இதை ‘‘க்ஷேத்ர பாலகர்’’ என கிராம மக்கள் அழைக்கின்றனர். தங்கள் காவல் தெய்வமாக நம்புகின்றனர். இவரை வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஹைதர் அலி வணங்கிய சாமுண்டீஸ்வரி மைசூரில் இருக்கும் சாமுண்டீஸ்வரி கோயில் மிகவும் பிரபலமானது. காளியின் மறு உருவமாக விளங்கும் இந்த சாமுண்டீஸ்வரியை வணங்காமல் மைசூரை ஆண்ட ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் எந்த செயலும் செய்யமாட்டார்கள் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம் ஆகும். ஹைதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் செய்யும் செயல்கள் சிறப்பாக நிறைவேறியதால், இந்த அம்மனுக்கு ஏராளமான நகைகளை வழங்கியிருக்கிறார்கள் என தல வரலாறு கூறுகிறது.

ஓடிவரும் அம்மன்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், காலைத் தூக்கிய நிலையில் ஓடி வருவதற்குத் தயாராக உள்ள அம்மன் காந்திமதி அம்மன். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இந்த அம்மன் அருட்பாலிக்கிறாள். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை ஓடி வந்து நிவர்த்தி செய்வாள் என்பதை குறிக்கும் வகையில் இந்த அம்மன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று முகத்தோற்றங்களில் சுந்தரரின் சிலைகள்

திருப்பூர் அருகிலுள்ளது திருமுருகன்பூண்டி. இங்குள்ள சிவனை முருகன் வணங்கியதால் ‘திருமுருகநாதர்’ என அழைக்கின்றனர். ஒரு சமயம் சுந்தரர், தனது நண்பர் சேரமானிடம் பரிசுகளைப் பெற்று இத்தலம் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிவன் தனது பூதகணங்களை அனுப்பி அவர் வைத்திருந்த பொருட்களைக் கவரும்படி செய்தார். கலங்கிய சுந்தரர் அங்கிருந்த விநாயகரிடம் முறையிட்டார். அவர் தனது தந்தைதான் அவரது பொருட்களைத் திருடச் செய்தார் என்று கூறி, அவர் மறைந்திருந்த இத்தலத்தையும் காட்டினார். இங்கு வந்த சுந்தரர், தன் பொருளைக் கவர்ந்த சிவனைத் திட்டி பதிகம் பாடி தனது பொருட்களை மீட்டார். பொருட்களைப் பறிகொடுத்தது, அதனை மீட்க சிவனிடம் முறையிட்டது, பொருட்களை மீட்டதும் மகிழ்ந்தது என மூன்று விதமான முகத்தோற்றங்களுடன் பொருட்களை சுந்தரர் காட்சிதருகிறார்.

இரு கைகளுடன் விஷ்வக்சேனர்

கும்பகோணம் அருகில் உள்ள திருத்தலம் ‘திருக்கண்ண மங்கை’ இத்தலத்தில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயிலில் இருக்கும் விஷ்வக்சேனர் சிறப்புடையவராவார். பிற திருக்கோயில்களில் நான்கு கரங்களுடன் தோன்றும் இவர் இக்கோயிலில் இரு கைகளுடன் விளங்குகிறார். தாம் நான்கு கரங்களுடன் தோன்றினால் திருமாலைக் காணவரும் திருமகள், தன்னையே திருமால் என எண்ணி விடுவாரோ எனும் எண்ணத்தினாலேதான் இரு கரங்களுடன் விளங்குகிறாராம்.

அரிய வடிவில் கருடாழ்வார்

திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி திவ்ய தேசத்தில் இருக்கும் தாமோதர நாராயணப் பெருமாள். திருக்கோயிலின் மகா மண்டபத்தின் தெற்கில், சுவாமி சந்நதிக்கு எதிராகத் தங்க முலாம் பூசப்பெற்ற உற்சவரான கருடாழ்வார் இருக்கிறார். கருடாழ்வார் பொதுவாகக் கைகளைக் கூப்பியவாறு தோன்றுவார். ஆனால்இத்திருத்தலத்தின் உற்சவர் வைகுண்டத்தில் தோன்றுவது போலக் கைகளை ஒன்றன் மேல் ஒன்றாகக் குறுக்கே மடக்கியவாறு கட்டிக்கொள்வதைப்போல உருக்கொண்டு அரிய வடிவில் காட்சி தருகிறார்.

ஜி.ராகவேந்திரன்

The post குழந்தை வரம் தரும் க்ஷேத்ர பாலகர் appeared first on Dinakaran.

Tags : Kshetra Balakar ,Chakrathathalwar ,Sri Williputhur Andal temple ,Virudhunagar district ,
× RELATED ராவத்தநல்லூர் கிராமத்தில்...